Friday, May 28, 2010

த..த..த...தவளை நடுக்கம்

ஏனுங்க, தவளைக்கி நிலநடுக்கம் முன் கூட்டியே தெரியுமுங்களா? கிரீஸ் நாட்டுல 1 மில்லியன் தவளை ரோட்டுக்கு வந்துடுச்சுங்களாம். ஏன்னு கேட்டீங்கன்னா, அங்கே நிலநடுக்கம் வரப்போவுதுங்களாம். இன்னும் ஒரு வாரத்துல நிலம் அங்கெ நடுங்கப்போவுதுங்களாம். நெசமுங்களா? ஆமா, இம்பூட்டுத் தவளைங்க ஒரே நேரத்துல குதிச்சா நிலம் நடுங்காம என்னங்க செய்யும்?

Sunday, May 23, 2010

சீமாச்சு என்ற பதிவரை 'விசாரிக்க' வேண்டும்!

சீமாச்சு என்ற பதிவர் தனது பதிவில் பின்வருமாறு எழுதுகிறார்: //மயிலாடுதுறை செல்லும் போது எங்க ஊரு MLA, MP, Chairman, பல கவுன்சிலர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்கும் வழக்கமுண்டு. பல மக்கள் பிரதிநிதிகள் எங்கள் வீட்டுக்கும் வருவார்கள்.. போவார்கள்.. அப்படிப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியுடன் “உற்சாக பான விருந்து” சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த இனிய மாலைப் பொழுதில், அவர் மூன்றாவது ரவுண்டு தாண்டியபோது கேட்டது “சீனு... நீங்க தான் அமெரிக்காவுல பெரிய்ய பேங்குல வேலைப் பாக்கறீங்களே.. கொஞ்சம் பணம் தர்றேன் .. உங்க பேங்க்குல அக்கவுண்ட் ஆரம்பிச்சிப் போட்டுத் தர்றீங்களா?”

அவர் “கொஞ்சம்” என்று சொன்ன அமவுண்டில் எங்க ஊரு DBTR தேசிய மேல்நிலைப் பள்ளியை முழுவதுமாக இடித்து 100 வகுப்பறைகளுடன் புதிய கட்டிடம் கட்டி மாணவர்கள் வசதியாகப் படிக்கலாம். நம்நாட்டுக்கு நல்ல எண்ணங்களுடைய அரசியல்வாதிகளைத் தருவதற்கு இறைவனைப் பிரார்த்திக்கிறேன் !! //
சீமாச்சு இப்படி எழுதியிருப்பது பின் வரும் பல செய்திகளை நமக்குச் சொல்கிறது: 1. சீமாச்சுவோடு குடும்ப ரீதியில் தொடர்புடைய அரசியல்வாதிகள் 'பலர்' இருக்கிறார்கள். அவர்களோடு சீமாச்சு உற்சாக பானங்களைச் சாப்பிடும் பழக்கம் உண்டு. 2. அப்படிப் பழகும் அரசியல்வாதிகளில் குறிப்பிடத் தக்கவர்கள் (அல்லது ஒருவரேனும்) வருமான வரித் துறைக்குத் தெரியாத அளவில் பெருந்தொகையைக் கையாடி வைத்திருக்கிறார். சீமாச்சுவுக்கு இந்த அரசியல்வாதி எவ்வளவு தொகையை அமெரிக்காவில் வங்கியில் வைப்பீடு செய்யச் சொன்னார் என்ற தகவல் தெரியும். இந்தத் தொகை சீமாச்சுவே தெரிவித்திருப்பது போல ஒரு பெரிய பள்ளியைக் கட்டலாம் என்றால் அத்தொகை பல கோடிகளாக இருக்கும். 3. மேற்சொன்ன அரசியல்வாதியைப் போலப் பலரது வருமான வரித் தில்லுமுல்லுகள் சீனு என்ற சீமாச்சுவுக்குத் தெரியும். இப்படிப்பட்ட தொகைகள் மக்களது வரிப்பணம் என்பதால் இவற்றைப் பற்றிய முழுமையான தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை ஒவ்வொரு இந்தியருக்கும், இந்திய வலைப்பதிவர்களுக்கும் உண்டு. சீமாச்சு நண்பர்களோடு உற்சாக பானம் அருந்திய பணத்தில் நம்முடைய வரிப்பணமும், ஏழைகளின் உழைப்பும் இரத்தமும் கலந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே மேற்கண்ட காரணங்களுக்காக, சீமாச்சு என்ற பதிவரை இந்திய வருமான வரி அதிகாரிகள் உடனடியாக விசாரிக்க வேண்டும் என வலைப்பதிவர்கள் வற்புறுத்த வேண்டும். அல்லது சீமாச்சுவே இத்தகவல்களை தனது வலைப்பதிவில் வெளியிட வேண்டும்.

பத்மஸ்ரீ கமலஹாசனுக்கு மனித நேயம் இருக்கிறதா?


அன்பே சிவமென்று படம் எடுப்பார், தூய தமிழிலேயே பேசுவார், கறுப்புச் சட்டையும் போட்டுக் கொள்வார், கடவுளைத் திட்டுவதுபோல் படமெடுப்பார், சாதி இல்லையென்பார், ஆனால் படத்துக்குள்ளே அத்தனை பார்ப்பனீயக் கருத்துக்களையும் திணிப்பார். பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள் ஒரு முரண்பாட்டுக் குதம்பல். நம்மிடம் வந்து நடுநிலையோடு பேசுபவர் போலப் பேசுவார் ஆனால் ஆதிக்கவாதிகளின் பக்கம் போய் அவர்களது மொழியில் சரசமாடிக் கொள்வார். போராட்டக் களத்தில் இருக்கும் நம்மைப் பணிய வைக்க ஆதிக்கவாதிகள் பயன்படுத்தும் மொன்னையாக்கும் ஆயுதமே பத்மஸ்ரீ கமலஹாசன். இவரது சாதியைப் பற்றி நமக்குக் கவலையில்லை. ஏனென்றால் நம்மோடு களமாடுவோர்களில் இவரது சாதி உட்பட அனைத்துச் சாதிகளும் உள்ளோம். சாதிகளற்ற தமிழினமே நமது இலட்சியம். சாதிகளை மறந்து தமிழராய் இணைவதே வெற்றி தரும். எனவே பத்மஸ்ரீ கமலஹாசனைச் சாதியை வைத்து நாம் பேசவில்லை. அவரது செயல்பாடுகளே காரணம். அவர் தன்னை ஒரு மனிதநேயராக நினைத்தாரேயானால், இதோ இலங்கையின் கொடூர இனப்படுகொலையை மூடிமறைக்க நடத்தப்படும் திரையுலகக் கூத்துக்கு அவர் செல்லக் கூடாது. அதனைப் புறக்கணிக்க வேண்டும். கண்டிக்க வேண்டும். அவ்விழாவை ஏற்பாடு செய்யும் தலைவர் பதவியிலிருந்து உடனே விலக வேண்டும். எனக்கு வந்த மின்னஞ்சலை அப்படியே கீழே தருகிறேன். அவர் வீட்டுக்கு எதிரே நடக்க இருக்கும் போராட்டத்திற்குச் செல்வோம்.

//It's important to understand Kamal Hasan's role in having IIFA Bollywood award to a genocide country.

Kamal Hasan is the Chairman Media & Entertainment Conclave of FICCI. And this FICCI's Media and Entertainment chapter has a greater role in choosing Srilanka as their destination to promote their businesses. And that’s why the IIFA has changed its mind from going to Seoul to Colombo. And this proposal would have not happened without the knowledge of Mr.KAMAL HASAN, who wrote a poem to condemn the London Bombing, and not uttered a word condemning Srilankan tamil genocide who happened to be a "HUMANIST" throughout his film. His post as Chairman is extended every year and this comes to end this June 2010, unless otherwise he wanted to continue. So he will say " I have no Role in IIFA awards Colombo".

http://www.ficci-frames.com/frames2010/entertainment_comm.html

http://www.ficci-frames.com/chennai_conclave/speakersprofiles.pdf

http://www.ficci-frames.com/frames2010/other_events.html

The award function of Bollywood was organized along with IIFA has the second day program filed with Global Business Forum. The forum is aimed at investment opportunities at Srilanka which is crippling by war and the withdrawal of GSP+ tax concession made by European Union. International pressure from various sources has already cornered the Srilanka to investigate the crimes.

This FICCI Global trade meet will help srilanka to escape from the international pressures and so is our protest to this Unethical business practice of FICCI Organisation. And we requesting Mr.Kamal Hasan to resign from the FICCI's Entertainment and media division's chairman to protest the FICCI for supporting Mahinda Rajapaksa of Srilanka

Kindly join with us to offer our letter to Kamalhasan at his residence on 23 May, 2010, Near Alwarpet Signal, Eldams Road, Next to Hotel SAMCO. around 10.00 in the morning.

அனைவரும் வரவும்!

Friday, March 19, 2010

அமேரிக்காவில் நான் ஆசிய இந்தியனா, தமிழனா?

இப்ப அமேரிக்காவுல சென்சஸ் எடுக்குறாங்க. சென்சஸ் 2010ன்னு ஒரே அமளிங்க. எல்லா வீட்டுக்கும் ஒரு தபால் அனுப்பியிருக்காங்க. அதில் இருக்க விண்ணப்பத்தைப் பூர்த்தி செஞ்சு, ஏப்ரல் முதல் தேதிக்குள்ள எல்லாரும் அனுப்பனுமாம். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை வச்சுத்தான் அரசாங்கம் நலத்திட்டம் எல்லாம் தீட்டுமாம்.

அதுமட்டும் இல்லங்க, இதை எல்லா விசா பிரிவுக் காரங்களும் அனுப்பனுமாம். நீங்க நிரந்தர வசிப்புரிமை அல்லது குடியுரிமை வச்சிருக்காட்டியும் அனுப்பலாமாம். அதனால எல்லாரும் அனுப்புங்க, சரிங்களா?

அதுல பாருங்க ஒரு கேள்வி கேட்டிருக்காங்க. உங்க இனம் என்ன? இந்தியாவுல நாம எல்லா இனத்துக்காரங்களும் ஒக்கப் போட்டு ஆக்கி, தாயா புள்ளையா இருந்தாலும் (ஹி ஹி சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்றேன்), துளு ஒரு இனம், காஷ்மீரி ஒரு இனம், மணிப்பூரி ஒரு இனம், தமிழ் ஒரு இனம் இல்லீங்களா? ஒரு இனம்னா அதுக்கு ஒரு மொழி, ஒரு கலாச்சாரம், அதுக்குன்னு ஒரு சில அடையாளங்கள் இருக்குதுங்க. அதெல்லாம் இருக்க எல்லாமே இனம்தானுங்களே. அதுனாலதான் தமிழ் ஒரு இனமுங்க. இந்தியா ஒரு பல்லின நாடுங்க. அதாவது அமெரிக்கா மாதிரி ஒரு multi-ethnic country. சரிங்களா? அதனாலதான் குடியுரிமை வகையில நான் ஒரு இந்தியனுங்க. ஆனா இனம் என்னன்னு கேட்டீங்கன்னா, நான் இந்தியன் இல்லீங்க, தமிழனுங்க. ஏன்னா இந்தியன் அப்படின்னு ஒரு இனம் இல்லீங்க. நீங்க அமெரிக்கன் அப்படின்னு ஒரு இனம்னு சொல்லிப் பாருங்க, சிரிப்பா இருக்கும். அமெரிக்காவுல அப்படி யாரும் சொல்றது இல்லீங்க. ஏன்னா அமெரிக்காவுல வெள்ளை இனம், கறுப்பர் இனம், செவ்விந்தியர் இனம் இப்படித்தானுங்க பிரிச்சிருக்காங்க. அதுனாலதான் நான் இந்தியன் அப்படின்னு போடுறது அருத்தமா இருக்காதுங்க. அப்ப நான் தமிழ் (Tamil) அப்படின்னுதான் போட்டிருக்கேனுங்க. நீங்களும் அப்படியே போடுங்க. அப்பத்தான் நாளைக்கு அமேரிக்காவுல தமிழுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். சரிங்க, இப்ப படத்தைப் பாத்துப் போட்டு, அதே மாதிரி ரொப்பிப் போடுங்க.


Thursday, March 4, 2010

கேட்டானே ஒரு கேள்வி!

எங்க ஊருக்கு ஒரு பையன் புதுசா வந்தான். பொதுவா, புதுசா வந்த பசங்கன்னாலே, அதுவும் கொஞ்சம் சின்னப் பசங்கன்னாலே, ரொம்ம்ம்ம்பப் பேசுவானுங்க. மேல போற ஏரோப்ளேனைப் பாத்து, இது F26ன்னு ஆரம்பிச்சு, மெர்சிடஸ்ஸுல இந்த வண்டிக்கு இத்தனை சிலிண்டருன்னு போட்டு, கூடவே நம்மளை நாலு கேள்வியும் கேட்டு கண்ணுல விரலை விட்டு ஆட்டுவானுங்க. ஆனா இந்தப் பையன் அவங்களை மாதிரியெல்லாம் இல்லாம ரொம்ப அமைதியா இருக்கான். அடேய் பேசுடான்னு போட்டு உலுப்புனாலும் பேசமாட்டேங்கறான். இந்த ஊருல பேசலைன்னா பொழைக்க முடியாதே. எப்புடியாச்சும் பேச வைப்போமுன்னு நான் நேரம் கிடைக்கிறப்பவெல்லாம் அவன் வாயைப் புடுங்குறது உண்டு. ஒரு நாள் அவனிடம் கேட்டேன், "தம்பி, வாழ்க்கையில ஒனக்கு முக்கியமானது எது?" என்னதான் சொல்லுறான்னு பாப்பமேன்னு நானும் இதைச் சொல்லுவானா, அதைச் சொல்லுவானான்னு பாத்துக்கிட்டேயிருந்தேன். ஆனா பையன் நம்மகிட்ட ஒரு எதிர்க்கேள்வி கேட்டான் பாருங்க, "இப்ப எங்கிட்ட இருக்கதா இல்லாததா?"
பளிச்! ஞான் அரண்டு போயி.
பய பொழச்சுக்குவான்!

அக்கினி எழு(து)கிறது

அக்கினி தகிப்பது. ஆக்குவது. அழிப்பது. குளிரின் சவத்தன்மையை விரட்டுவது. நாளங்களில் பாய்வது. நரம்புகளில் உயிர்ப்பாயிருப்பது. உயிர்களில் உவப்பாயிருப்பது. அக்கினியோடு கலக்கும் யாவும் அக்கினியின் தன்மையதாகின்றன. அக்கினியால் ஒளி பெறுகிறோம். அக்கினியால் வனப்பெய்துகிறோம். அக்கினியால் அழகினைக் கண்ணுறுகிறோம். அக்கினி ஏறிவரும் குதிரைகள் விரைவானவை. அது பயணிக்கும் யானைகள் வலிமையானவை.

இங்கு ஒரு அக்கினி எழுகிறது. செயல்கள் அக்கினியால் பிறக்கின்றன. எழுத்தும் அக்கினியாலேயே பிறக்கிறது. ஆன்மாக்கினி. அகக்கினி. உள்ளே கனன்றுகொண்டிருக்கும் சூட்டில் எழுத்துக்கள் பிறக்கின்றன. விரல்களின் சூட்டோடு இசைந்துகொள்ளும் எழுத்துக்களுக்கு வடிவம் பிறக்கிறது. அக்கினியில்லாதது எது? எதுவுமில்லை. குளிரும் அக்கினிதான். குறைந்த அக்கினி. உறங்கும் அக்கினி. அக்கினியோடு தொடர்புகொண்டிராத அக்கினி. ஒவ்வொரு பொருளுக்குள்ளும் அக்கினித் தன்மை உள்ளகமாயிருக்கிறது. மற்றொரு அக்கினியோடு தொடர்புகொண்டதும் இதன் அக்கினித் தன்மை உயிர்ப்பெய்துகிறது. அக்கினிகளில் பெரியார் சிறியார் இல்லை. ஏனென்றால் எல்லா அக்கினிகளும் ஒரு பயணத்தில் தாம் இருப்பதை உணர்ந்திருக்கின்றன. சிறியது பெரிதாகலாம். எதுவேண்டுமானாலும் அவிந்துபோகலாம். எனவே ஒன்று இன்னொன்றை எள்ளுவதில்லை.

இனி அக்கினி எழுதும்.