Friday, March 19, 2010

அமேரிக்காவில் நான் ஆசிய இந்தியனா, தமிழனா?

இப்ப அமேரிக்காவுல சென்சஸ் எடுக்குறாங்க. சென்சஸ் 2010ன்னு ஒரே அமளிங்க. எல்லா வீட்டுக்கும் ஒரு தபால் அனுப்பியிருக்காங்க. அதில் இருக்க விண்ணப்பத்தைப் பூர்த்தி செஞ்சு, ஏப்ரல் முதல் தேதிக்குள்ள எல்லாரும் அனுப்பனுமாம். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை வச்சுத்தான் அரசாங்கம் நலத்திட்டம் எல்லாம் தீட்டுமாம்.

அதுமட்டும் இல்லங்க, இதை எல்லா விசா பிரிவுக் காரங்களும் அனுப்பனுமாம். நீங்க நிரந்தர வசிப்புரிமை அல்லது குடியுரிமை வச்சிருக்காட்டியும் அனுப்பலாமாம். அதனால எல்லாரும் அனுப்புங்க, சரிங்களா?

அதுல பாருங்க ஒரு கேள்வி கேட்டிருக்காங்க. உங்க இனம் என்ன? இந்தியாவுல நாம எல்லா இனத்துக்காரங்களும் ஒக்கப் போட்டு ஆக்கி, தாயா புள்ளையா இருந்தாலும் (ஹி ஹி சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்றேன்), துளு ஒரு இனம், காஷ்மீரி ஒரு இனம், மணிப்பூரி ஒரு இனம், தமிழ் ஒரு இனம் இல்லீங்களா? ஒரு இனம்னா அதுக்கு ஒரு மொழி, ஒரு கலாச்சாரம், அதுக்குன்னு ஒரு சில அடையாளங்கள் இருக்குதுங்க. அதெல்லாம் இருக்க எல்லாமே இனம்தானுங்களே. அதுனாலதான் தமிழ் ஒரு இனமுங்க. இந்தியா ஒரு பல்லின நாடுங்க. அதாவது அமெரிக்கா மாதிரி ஒரு multi-ethnic country. சரிங்களா? அதனாலதான் குடியுரிமை வகையில நான் ஒரு இந்தியனுங்க. ஆனா இனம் என்னன்னு கேட்டீங்கன்னா, நான் இந்தியன் இல்லீங்க, தமிழனுங்க. ஏன்னா இந்தியன் அப்படின்னு ஒரு இனம் இல்லீங்க. நீங்க அமெரிக்கன் அப்படின்னு ஒரு இனம்னு சொல்லிப் பாருங்க, சிரிப்பா இருக்கும். அமெரிக்காவுல அப்படி யாரும் சொல்றது இல்லீங்க. ஏன்னா அமெரிக்காவுல வெள்ளை இனம், கறுப்பர் இனம், செவ்விந்தியர் இனம் இப்படித்தானுங்க பிரிச்சிருக்காங்க. அதுனாலதான் நான் இந்தியன் அப்படின்னு போடுறது அருத்தமா இருக்காதுங்க. அப்ப நான் தமிழ் (Tamil) அப்படின்னுதான் போட்டிருக்கேனுங்க. நீங்களும் அப்படியே போடுங்க. அப்பத்தான் நாளைக்கு அமேரிக்காவுல தமிழுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். சரிங்க, இப்ப படத்தைப் பாத்துப் போட்டு, அதே மாதிரி ரொப்பிப் போடுங்க.


Thursday, March 4, 2010

கேட்டானே ஒரு கேள்வி!

எங்க ஊருக்கு ஒரு பையன் புதுசா வந்தான். பொதுவா, புதுசா வந்த பசங்கன்னாலே, அதுவும் கொஞ்சம் சின்னப் பசங்கன்னாலே, ரொம்ம்ம்ம்பப் பேசுவானுங்க. மேல போற ஏரோப்ளேனைப் பாத்து, இது F26ன்னு ஆரம்பிச்சு, மெர்சிடஸ்ஸுல இந்த வண்டிக்கு இத்தனை சிலிண்டருன்னு போட்டு, கூடவே நம்மளை நாலு கேள்வியும் கேட்டு கண்ணுல விரலை விட்டு ஆட்டுவானுங்க. ஆனா இந்தப் பையன் அவங்களை மாதிரியெல்லாம் இல்லாம ரொம்ப அமைதியா இருக்கான். அடேய் பேசுடான்னு போட்டு உலுப்புனாலும் பேசமாட்டேங்கறான். இந்த ஊருல பேசலைன்னா பொழைக்க முடியாதே. எப்புடியாச்சும் பேச வைப்போமுன்னு நான் நேரம் கிடைக்கிறப்பவெல்லாம் அவன் வாயைப் புடுங்குறது உண்டு. ஒரு நாள் அவனிடம் கேட்டேன், "தம்பி, வாழ்க்கையில ஒனக்கு முக்கியமானது எது?" என்னதான் சொல்லுறான்னு பாப்பமேன்னு நானும் இதைச் சொல்லுவானா, அதைச் சொல்லுவானான்னு பாத்துக்கிட்டேயிருந்தேன். ஆனா பையன் நம்மகிட்ட ஒரு எதிர்க்கேள்வி கேட்டான் பாருங்க, "இப்ப எங்கிட்ட இருக்கதா இல்லாததா?"
பளிச்! ஞான் அரண்டு போயி.
பய பொழச்சுக்குவான்!

அக்கினி எழு(து)கிறது

அக்கினி தகிப்பது. ஆக்குவது. அழிப்பது. குளிரின் சவத்தன்மையை விரட்டுவது. நாளங்களில் பாய்வது. நரம்புகளில் உயிர்ப்பாயிருப்பது. உயிர்களில் உவப்பாயிருப்பது. அக்கினியோடு கலக்கும் யாவும் அக்கினியின் தன்மையதாகின்றன. அக்கினியால் ஒளி பெறுகிறோம். அக்கினியால் வனப்பெய்துகிறோம். அக்கினியால் அழகினைக் கண்ணுறுகிறோம். அக்கினி ஏறிவரும் குதிரைகள் விரைவானவை. அது பயணிக்கும் யானைகள் வலிமையானவை.

இங்கு ஒரு அக்கினி எழுகிறது. செயல்கள் அக்கினியால் பிறக்கின்றன. எழுத்தும் அக்கினியாலேயே பிறக்கிறது. ஆன்மாக்கினி. அகக்கினி. உள்ளே கனன்றுகொண்டிருக்கும் சூட்டில் எழுத்துக்கள் பிறக்கின்றன. விரல்களின் சூட்டோடு இசைந்துகொள்ளும் எழுத்துக்களுக்கு வடிவம் பிறக்கிறது. அக்கினியில்லாதது எது? எதுவுமில்லை. குளிரும் அக்கினிதான். குறைந்த அக்கினி. உறங்கும் அக்கினி. அக்கினியோடு தொடர்புகொண்டிராத அக்கினி. ஒவ்வொரு பொருளுக்குள்ளும் அக்கினித் தன்மை உள்ளகமாயிருக்கிறது. மற்றொரு அக்கினியோடு தொடர்புகொண்டதும் இதன் அக்கினித் தன்மை உயிர்ப்பெய்துகிறது. அக்கினிகளில் பெரியார் சிறியார் இல்லை. ஏனென்றால் எல்லா அக்கினிகளும் ஒரு பயணத்தில் தாம் இருப்பதை உணர்ந்திருக்கின்றன. சிறியது பெரிதாகலாம். எதுவேண்டுமானாலும் அவிந்துபோகலாம். எனவே ஒன்று இன்னொன்றை எள்ளுவதில்லை.

இனி அக்கினி எழுதும்.